தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட லிந்துலை – ராணிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மக்கள், தமது பிரதான வீதியை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு கோரி இன்று (26) மாலை 3.00 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நோனாதோட்டம் நகரத்திலிருந்து ராணிவத்தை தோட்டம் வரை செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கடும் மழையின் காரணமாக முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதிக்கான போக்குவரத்து சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வீதி பழுதடைந்துள்ளதால், தோட்டத்திற்குள் வரவேண்டிய பேருந்துகள் அனைத்தும் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்படுகின்றன.
இதன் காரணமாகப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், நோயாளர்கள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நீண்ட தூரம் கால்நடையாகச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பெரிய ராணிவத்தை, சின்ன ராணிவத்தை, குட்டிமலை மற்றும் பம்பரகலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீதியைச் செப்பனிட்டுத் தருமாறு மலையக அரசியல்வாதிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் வீதி மேலும் மோசமடைந்துள்ளதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு வீதியை அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
பம்பரகலை தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, இல்டனோல் (Eildon Hall) தமிழ் வித்தியாலயம் வரை பேரணியாகச் சென்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மக்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
