மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் கொள்ளுப்பிட்டி, அருள்மிகு சக்தி அம்மன் திருக்கோயில்

அனைத்துயிர்கள் உள்ளும் இருந்தாளும் தாயே
அசைவு தந்து ஆட்டுவிக்கும் பேரருளே அம்மா
உடனிருந்து எங்களை நீ காத்தருள வேண்டும்
கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி

ஆறுதலைத் தந்தெம்மை அணைத்தருளும் தாயே
ஆதரித்துக் காத்தருளும் பேரருளே அம்மா
மகிழ்ச்சியுடன் எங்களை நீ வாழ வைக்க வேண்டும்
கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி

நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து நிம்மதியைத் தரும் தாயே
நித்தம் உடனிருந்து வழி காட்டும் பேரருளே
நிம்மதியைத் தந்தெம்மை உயர்த்திவிட வேண்டும்
கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி
காவல் தந்து எமையென்றும் காத்தருளும் தாயே
காலமெல்லாம் அருகிருந்து வழிநடத்தும் பேரருளே
குற்றமில்லா நல்வாழ்வைத் தந்தெம்மை வழிநடத்த வேண்டும்
கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி
நன்மைகள் நமக்களித்து வாழவைக்கும் தாயே
மனக்கவலை அறுத்தெமக்கு அருளளிக்கும் பேரருளே
உடல் நலமும், உளநலமும் தந்தெம்மை வாழவைக்க வேண்டும்
கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி
அறிவுதந்து ஆற்றல் தந்து வழிநடத்தும் தாயே
அச்சமின்றி நாம் வாழ அருளளிக்கும் பேரருளே
ஒற்றுமை மிகு வாழ்வு தந்து உயர்வுதர வேண்டும்
கொள்ளுப்பிட்டியில் கோயில் கொண்ட சக்தி அம்மா தாள் போற்றி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.