கடந்த 2020 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இளம் தளிர் அமைப்பு கொட்டக்கலை டிரைட்டன் பகுதியில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளது.

இவ்வமைப்பானது அப்பகுதி வாழ் இளைஞர்கள் தங்கள் பிரதேசத்தில் ஏதேனும் நற்செயல் செய்ய வேண்டும், பிரதேசத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற கருப்பொருளில் இந்த அமைப்பை ஆரம்பித்து பிரதேசத்தில் கவனிப்பற்ற நிலையில் காணப்பட்ட நூலகத்தின் புனரமைப்பு வேலைகள் மேற்கொண்டதோடு, டிரைட்டன் பகுதின் அடையாளமாக இருக்கும் தெற்ப குளத்துக்கு பெரண்டினா அமைப்பின் மூலம் சிறிய படகு வாங்கித்தந்து பிரதேச அபிவிருத்திற்கு வித்திட்டது.

ஒரு பிரதேசத்தை கல்வி ரீதியாகதான் உயர்த்த முடியும் என்கின்ற எண்ணக் கருவில் அப்பகுதியில் கல்வி கற்கும் சாதாரண தர மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் நடாத்துதல், மலையகத்தின் கல்வி கற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் விசேட கருத்தரக்குகள் இலவசமாக நடாத்துதல், மாணவர்களுக்கு தலைமைத்துவ பண்பினை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

மேலும் இப்பிரதேசத்தில் கைத்தொழிலை ஊக்குவித்தல், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

அத்தோடு பல வருடங்களாக முடக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அப்பகுதியின் முன்பள்ளியினை மீண்டும் ஆரம்பித்து வைத்தல் போன்ற செயற்பாட்டையும் மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டு வருடாந்த தேர் திருவிழாவில் 80, 000/= செலவு செய்து பிரம்மாண்டமான சிகர அமைப்புகளை அமைத்தலென இவர்களின் சேவை அந்த பிரதேசத்தில் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

எந்தவோரு எதிர்பார்ப்பும் இன்றி தங்கள் ஊருக்கு தங்களால் இயன்ற உதவி என்கின்ற வகையிலும் எதிர்கால சந்ததி ஆரோக்கியமான சூழலில் வாழ வேண்டும், அவர்களின் ஆயுதமாக கல்வி கட்டாயம் இருக்க வேண்டும் என்கின்ற நோக்கில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

