ஹட்டன் டிக்கோயா விநாயகர் ஆலயத்தில் அதிகாலையில் கொள்ளை.
அட்டன் வீதியில் அமைந்துள்ள வனராஜா விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆலயத்தின் முற்பகுதியில் உள்ள கதவை உடைத்து உண்டியலை எடுத்து அதில் உள்ள பணத்தை எடுத்து விட்டு, மீண்டும் உண்டியலை குறித்த இடத்திலேயே வைத்துச் கதவை பூட்டிவிட்டு சந்தேக நபர் சென்றுள்ளதாக சிசிடிவி கமரா மூலம் தெரிய வந்துள்ளது.
நிர்வாகத்தினர் அதிகாலை வேலை கோயிலை திறக்க முற்பட்ட போதே இச்சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த உண்டியலில் இடும் பணத்தை 15 நாட்களுக்கு ஒரு முறையே தாம் எடுப்பதாகவும் சுமார் 30 ஆயிரம் ரூபா அதில் இருந்திருக்கலாம் எனவும் ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர் .
கௌசல்யா.

