அருள்தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் தாயே
அரவணைத்து அன்பு செய்து காத்தருள வருவாய்
துணையிருந்து எங்களை நீ வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
பண்புடனே நாம்வாழ வழியமைக்கும் தாயே
பரிதவிப்பு இல்லாமல் காத்தருள வருவாய்
மனமகிழ்வு தந்தெம்மை வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
உயிர்க் கெல்லாம் தாயாக இருப்பவளே தாயே
உலகத்தில் எம் நிலையை உயர்த்திடவே வருவாய்
உறுதுணையாயிருந் தெமக்கு வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
மலை சூழ்ந்த திருவிடத்தில் அமர்ந்தருளும் தாயே
மதி நிறைந்த மனத்தினராய் வாழச் செய்ய வருவாய்
முயற்சிகளில் வெற்றிதந்து வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
நம்பிச் சரணடைவோர் நலன் காக்கும் தாயே
நிம்மதியைத் தந்து எம்மை வாழவைக்க வருவாய்
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்
பனாவத்தை தோட்டமதில் பதி அமர்ந்த தாயே
பசிக்கொடுமை இல்லாமல் வாழவைக்க வருவாய்
தமிழ்மொழிக்கு தளராது வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.