2023 கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை இன்று (04) ஆரம்பமாகின்றது.
இம்முறை பரீட்சையில் 346,976 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றது. அதில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரிகளும் 65,331 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் அடங்குவர். உயர் தரப்பரீட்சை இன்று (04/01/2024) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாடு பூராகவும் 2298 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மழைக்காலம் என்பதனால் சில இடங்களில் இன்னும் அனர்த்த நிலைமைகள் காணப்படுவதாகவும், அப்பிரதேசங்களில் மாணவர்கள் பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக அவசியமான சகல வசதிகளையும் வழங்குவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
அனர்த்த நிலையில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் அல்லது அவர்களுக்கு வசதியான பரீட்சை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், முப்படையினர் ஒன்றிணைந்து பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக் காட்டினார்.
அவசியமாயின் பரீட்சார்த்திகளுக்கு புதிதாக பரீட்சை நிலையங்களை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
மாணவர்களுக்கு தற்போதைய காலநிலை காரணமாக ஏற்படும் சவால்களைத் தவிர்ப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை 117 அல்லது பரீட்சைகள் திணைக்களத்தை 1911 இயக்கத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
