சாணக்கியத்துடன் சவால்களை எதிர்கொண்டவர் சம்பந்தன்
– முன்னாள் எம்.பி திலகர் இரங்கல்
வெளியில் இருந்து அரசியல் விமர்சனம் செய்வததென்பதும் அமைப்பு ரீதியாக அரசியல் செற்பாடுகளை முன்னெடுத்து அரசியல் தளத்தில் இயங்குவது என்பதும் வேறு வேறானவை. அரசியல் பேசிக் கொண்டு இருப்போர் மிக இலகுவாக எண்ணும் பல விடயங்கள் யதார்த்தமான செயற்பாடுகளில் பல்வேறு சிக்கலான சவால்களை உருவாக்கும். அத்தகைய சவால்களை இலங்கை அரசியல் சூழலில் எதிர்கொண்டு இயங்கிய தலைவரே இரா.சமபந்தன் ஆவார். அன்னாருக்கு மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் அஞ்சலிகளைத் தெரிவிக்கின்றோம் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுபுபினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுபுபினருமான இரா.சமபந்தனின் மறைவினையடுத்து அவர் விடுத்திருக்கும் இரங்கல் சசெய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசியலில் தமிழர்களின் தீர்மானமிக்கக் காலப்பகுதி 2009 ஆகும். சுமார் நான்கு தசாப்தங்களாக இலங்கைத் தமிழர் தரப்பின் கோரிக்கையாக இருந்த தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானிப்பது இவகுவானதல்ல. அதனை இலங்கை சுதந்திர தின நிகழ்வு ஒன்றில் இலங்கைத் தேசிய கொடியான சிங்கக் கொடியைக் கையில் ஏந்தி பிரகடனம் செய்வது என்பது மிகவும் துணிச்சலான செயற்பாடாகும். ஒரு பக்கம் பெரும்பான்மை சிங்கள அரசியல் தரப்பு தேசியக் கொடியினை தமது இனத்தின் வெற்றியின் அடையாளமாக ஆக்கிரமித்துக் கொண்ட நிலையில், மறுபக்கம் தமிழர் தரப்பு தம் மீதான ஆக்கிரமிப்பின் அடையாளமாக அதனைக் கருதி வெறுத்து ஒதுக்குகையில் அதே தேசியக் கொடியினை இணக்கப்பாட்டின் அடையாளமாகக் கையாள்வது என்பது மிகவும் சவாலானதும் சாதுரியமானதுமான நிலைப்பாடாகும். தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களை சமாளிக்கும் அதே நேரம் அவர்கள் எதிர் தரப்பாகக் கருதும் இலங்கை அரசையும் சமாளிக்கும் ராஜதந்திரம் மிகவும் சாமர்த்தியமானது. 2005 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் தரப்பு முற்றுமுழுதாகப் புறக்கணித்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து வந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் தரப்புக்கு எதிராக உள்நாட்டுப் போருக்கு தலைமை கொடுத்த தளபதி சரத் பொனசேக்காவுக்கு ஆதரவு வழங்குவதற்கு எடுத்த தீர்மானமும் அதனை நோக்கி மக்களை வழிநடாத்தியதும் துணிச்சலான அரசியல் நகர்வாகும். வெளியில் நின்று அரசியல் விமர்சனம் செய்வோர் ஆயிரம் கதைகள் பேசலாம். ஆனால் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இத்தகைய தீர்மானங்களை எடுத்து கட்சியை வழிநடாத்துவது இலகுவானதல்ல. அரசியல் செயற்பாட்டாளர்களின் மிகப் பிரதான சவால் எதிர் கட்சியினருடனான போராட்டத்தை விட தமது கட்சியை வழிநடாத்துவதாகும். கூடவே இருந்து தமக்கும் தலைமைக்கும் அமைப்புக்கும் அச்சுறுத்தல் விடும் உட்கட்சி அரசியலை சமாளிப்பது மிகவும் சவாலானது. அதனை சம்பந்தன் ஐயா மிகச் சாதுரியமாகச் செய்தார்.
தீபாவளிக்குத் தீர்வு வரும், தைப் பொங்கலுக்குத் தீர்வு வரும் என அவர் விடுக்கும் அறிக்கைகள் விமர்சனத்துக்கும் நகைப்புக்கும் உள்ளான போதும் உட்கட்சி அரசியலை சமாளிக்க அவரிடம் இருந்த துரும்பாக அதனை அவர் கையாண்டார் என்பதே உண்மை. அதனை நுணுக்கமாக பார்க்கும்போது புரியும்.
2015 நல்லாட்சிக் காலத்தில் ஆளும் கட்சி உறுப்பினராக நான் இருந்த போதும் ஆளும் கட்சி ஆசன எண்ணிக்கை அதிகமாதலால் எனக்கு எதிர்த்தரப்பு பக்கத்திலேயே ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் எதிர் கட்சித் தலைவரான சம்பந்தன் அய்யாவுடன் உரையாடும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. “வணக்கம் அய்யா” என நாங்கள் மரியாதை செய்ய, “இன்றைக்கு எனன தம்பி விவாதம்?” என்றுதான் எங்களுடன் பேச்சை ஆரம்பிப்பார். “இந்த விவாதத்தில் நான் பேச வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீங்களா?”!என ஒரு புன்னகையுடன் கேட்பார். “அய்யா பேசினால் கேட்க ஆவலாக உள்ளோம்” என்பது எனது பொதுவான பதிலாக இருக்கும். விவாதம் ஆரம்பித்தவுடன் அவரது ஆங்கில உரையைக் கேட்க ஆச்சரியமாக இருக்கும். சுட்டிக் காட்டுல்களை ஏற்ற இறக்கங்களுடன் ஆங்கில மொழியை அவர் கையாளும் விதமே தனித்துவமிக்க து. அது சம்பந்தனுக்கே உரிய கலை எனச் சொன்னால் மிகையில்லை. உரை முடிந்து சபையில் இருந்து வெளியேறும் அவரை கட்சி பேதம் மறந்து எழுந்து நின்று சக உறுப்பினர்கள் வழி அனுப்பும் காட்சி இனியொரு தமிழ்த் தலைவருக்குக் கிடைக்கும் என நான் எண்ணவில்லை.
நல்லாட்சிக் காலத்தில் அவர் சாதித்திருக்க வேண்டிய பல விடயங்களை ஏனோ தவறவிட்டார் என்பது அவரது தலைமை மீதான விமர்சனம் இருந்தாலும் அவரது காலத்தில் பாராளுமன்ற அவையில் பேசும், பழகும் வாய்ப்புப் பெற்றவனாக , அவரது அனுபவங்களில் பல பாடங்களைக் கற்றுக் கொண்டவனாக, அவர் படியேறி சபையில் இருந்து வெளியேறும் பொழுதுகளில் அவரது கரம் பற்றி உதவியவனாக எனது ஆத்மார்த்தமான அஞ்சலியை சம்பந்தன் எனும் பெருந்தலைவருக்கு வழங்குவதுடன் அன்னாரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் மலையக அரசியல் அரங்கத்தின் சார்பிலும் மலையகத் தமிழ் மக்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.