பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றவர்களினால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் இன்று (9) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் பேசி வருகிறோம். பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக சில குழுக்கள் கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தன. இதனால் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. மேல்மாகாணத்தில்தான் இந்த ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மேல்மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சை நடாத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் ஆனால் பாடவாரியாக ஆட்சேர்ப்பு நடைபெறும் போது சிலர் கைவிடப்பட்டுள்ளனர்.
ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பாக தீர்மானங்களை எடுத்தோம். மேல் மாகாணத்தில் வெற்றிடங்களை விட பட்டதாரிகளே அதிகம். அதனால்தான் பரீட்சை நடத்தப்பட்டது. ஆனால் ஏனைய மாகாணங்களில் அவ்வாறான நிலை இல்லை.
நான் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய போது பரீட்சைகளை நடாத்தி பட்டதாரிகளை உள்வாங்கினோம். அடுத்து பட்டதாரிகள் தாமாகவே முன்வந்து பாடசாலைகளில் கற்பிக்க வந்தனர். அவர்கள் அதை ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டனர். எனவே, மேல் மாகாணத்தின் பிரச்சினை பாரியளவில் தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டு பிரதேச செயலக மட்டத்தில் அவர்களின் தகவல்கள் பெறப்பட்டன. இது தொடர்பாக நான் அமைச்சர் சுசிலிடம் பேசி 45 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளேன் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.