இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் அந்த நிறுவனங்களினால் வழங்கப்படும் அனைத்து சேவைகள் குறித்தும் பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நிகழ்ச்சிகளின் நுவரெலியா மாவட்ட நிகழ்ச்சி 22-23 ஆம் திகதி நுவரெலியா கிரிகரி கார் பார்க்கில் நடைபெறுகின்றது.
மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் திரு.ஜி.பி.ஆர்.கருணாரத்ன தலைமையில் நுவரெலியாவிலுள்ள அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவன கிளை முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ஆரம்பமானதுடன் இரண்டாம் நாளான 23 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தனால் வீரசிங்கவும் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இங்கு, மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் வழங்கும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் அவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய அறிவு,
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான அனைத்து சிக்கல் நிலைகளுக்கும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் இரண்டு நாட்களுக்குள் தீர்வுகளை வழங்குவார்கள் மற்றும் வங்கி கணக்குகளை பேணுவது தொடர்பான அனைத்து சேவைகளும் இந்த இரண்டு நாட்களுக்குள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இத்திட்டத்துடன், மத்திய வங்கியின் கீழ் இயங்கும் அனைத்து நிதி நிறுவனங்களின் ஊடாக கடன் வசதிகளை நடத்தி வரும் சிறு வணிக உரிமையாளர்களின் வர்த்தக கண்காட்சியும் நிகழ்ச்சி முழுவதும் நடைபெறுகிறது.
