20க்கு-20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!
அஹமதாபாத்: சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி சம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
அஹமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இந்த இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணிக்கு பணிக்கப்பட்டது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்தியாவின் இமாலய ஓட்டங்கள்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய வீரர்கள் விபரம்:
சஞ்சு சாம்சன்: 89 (46 பந்துகள்)
இஷன் கிஷன்: 54 (25 பந்துகள்)
அபிஷேக் ஷர்மா: 52 (21 பந்துகள்)
ஷிவம் டுபே: 26* (08 பந்துகள்)
ஹர்திக் பாண்டியா: 18 (13 பந்துகள்)
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த போதிலும் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.
திணறிய நியூசிலாந்து
256 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
அந்த அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 96 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் பந்துவீச்சு பலம்:
ஜஸ்பிரிட் பும்ரா: 4 விக்கெட்டுகள்
அக்ஸர் பட்டேல்: 3 விக்கெட்டுகள்
ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரும் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினர்.
இந்த ஆட்டத்தின் நாயகனாக (Player of the Match) சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரிட் பும்ரா தெரிவு செய்யப்பட்டார்.
