மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றில் இன்று (10) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று சபையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று, அதற்கு பாராளுமன்றம் முறையான அனுமதி வழங்கியதன் பின்னரே தேர்தல் தினம் தொடர்பான இறுதி அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிட முடியும்.தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் காணப்படும் சில முக்கிய குறைபாடுகள் காரணமாகவே தேர்தலை நடத்துவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது எழுந்துள்ள இந்தச் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பதற்கும், தேர்தல் முறையைத் தீர்மானிப்பதற்கும் பாராளுமன்றின் ஊடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
தற்போதுள்ள சட்டத்தை மாற்றி புதிய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதா?
அல்லது, அதில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துவதா?
குறித்த பாராளுமன்ற விசேட குழுவின் பரிந்துரைகள் மற்றும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகளை அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் சுட்டிக்காட்டினார்.
