உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக இந்த மனு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பிரதிவாதிகளாக பின்வருவோர் பெயரிடப்பட்டுள்ளனர்:பொலிஸ் மா அதிபர் (IGP),குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர,குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தற்போது புதிய கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்தத் தடை உத்தரவு கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனு மீதான பரிசீலனை விரைவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
