நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே இன்று (05) ஏற்பட்ட மோதலில் 20 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியளவில் கைதிகளின் இரு வேறு குழுக்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் பெரும் வன்முறையாக மாறியுள்ளது. மோதலில் காயமடைந்த 20 கைதிகளும் உடனடியாக மீட்கப்பட்டு நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிரடிப்படை குவிப்பு
மோதலைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்திற்குள் பெரும் பதற்ற நிலை உருவானது. இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்துடன், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கைதிகளுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
