முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் பலி, மூவர் படுகாயம்!
மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான சாலையில் மோகினி எல்ல நீர்வீழ்ச்சிப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
நல்லதண்ணி தோட்ட கீழ் பிரிவிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் முச்சக்கர வண்டியில் மஸ்கெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், மோகினி எல்ல நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு அருகில் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடிக்கும் அதிகமான பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள்:
ராமலிங்கம் திவாகரன் (வயது 26) – முச்சக்கர வண்டி சாரதி
கந்தசாமி செல்வம் (வயது 46)
மேற்கண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்கள்:
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியைச் சேர்ந்த பின்வரும் மூன்று மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர்:
செல்வம் கம்ஷிகா (வயது 16 – மாணவி)
ஆர்.எம். விஸ்வதிவங்கர (வயது 13 – மாணவன்)
செல்வம் தக்ஷனா (வயது 13)
படுகாயமடைந்த மூவரும் ‘1990’ சுவசெய அவசர கால ஊர்தி (அம்பூலன்ஸ்) மூலம் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சைகளின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் – செ.தி.பெருமாள்
