தலவாக்கலை நகர பஸ்தரிப்பு நிலையத்தின் மேல் பகுதியில் பெரிய தேன்கூடு ஒன்று காணப்படுவதுடன், இதனால் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பஸ்தரிப்பு நிலையத்திற்கு நாளாந்தம் பஸ்களுக்காகக் காத்திருக்கும் பயணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் எனப் பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் தேன்கூடு ஒன்று அமைந்திருப்பது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சிறிய சத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ தேனீக்கள் கலைந்து தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் அங்கு நடமாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படுவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட பிரதேச சபையினர் மற்றும் உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆபத்தான தேன்கூட்டினை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
