இன்று அதிகாலை வேளையில் இப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதிக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே சரிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக ஹட்டனில் இருந்து கொழும்பு மற்றும் கண்டி நோக்கிச் சென்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து முற்றிலுமாகத் தடைப்பட்டது. இதனால் அதிகாலையில் பயணங்களை மேற்கொண்டவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ கடமைகளுக்குச் சென்றோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
உடனடியாகச் செயற்பட்ட நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும், ஹட்டன் காவல்துறையினரும் இணைந்து வீதியில் விழுந்த பாரிய மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மரத்தின் பெரும்பகுதிகள் வெட்டி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரதான சாலையின் போக்குவரத்துச் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர தெரிவித்தார். மலையகப் பகுதியில் தொடரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(செய்தி: மஸ்கெலியா விசேட நிருபர்)
