அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் முழுமையாக நீர் விநியோகம் தடைப்படும்.
அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் இந்நீர்வெட்டு அமுலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடைப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்கள் இக்காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
