நாட்டில் நிலவும் மழை உடனான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 38 மத்திய மற்றும் பாரிய நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருகின்றன.
தெதுரு ஓயா, இராஜாங்கனை, இங்கினிமிட்டிய, யான் ஓயா மற்றும் உஸ்கல சியம்பலன்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களிலேயே நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
பாரிய வெள்ள அபாயம் இல்லை என்றபோதிலும், நில்வளா, கிங், களு மற்றும் களனி ஆகிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்து சிறிய அளவிலான வெள்ள நிலைமை நிலவி வருகின்றது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்தின் கடான மற்றும் ஜா-எல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியிருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் மழை எதிர்பார்க்கப்படுவதால், ஆறுகள் மற்றும் வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் நீராடுவதையோ அல்லது ஆபத்தான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
