கஹவத்தையைச் சேர்ந்த சிரேஷ்ட ஆசிரியரும் எழுத்தாளருமான தோழர் ரஞ்சித் ஜெயகர் எழுதிய ‘காலம் மறந்த கதைகள்’ எனும் நினைவுப் பதிகை (Memoir) நூல் அறிமுக விழா வத்தளையில் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் போது, அவரது நீண்டகால ஆவணக்காப்பு ஆய்வுப் பணிகளையும், வரலாற்றுத் தகவல் களஞ்சியமாக ஆற்றிவரும் சேவையையும் கௌரவிக்கும் வகையில், அவருக்கு அகில இலங்கை ரீதியில் புகழ்பெற்ற ‘தெளிவத்தை ஜோசப் ஞாபகார்த்த விருது – 2026’ வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளது.
வத்தளையில் இயங்கி வரும் ‘தெளிவத்தை ஜோசப் ஆய்வகம் மற்றும் ஆவணகம்’ அமைப்பினால் இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
:
2023 ஆம் ஆண்டு: மலையக ஆய்வாளர் மு.சி. கந்தையா (கூடலூர்) அவர்களுக்கு, திருச்சி தமிழ் காவேரி இதழ் மற்றும் தமிழகன் திருச்சிராப்பள்ளி குழுவுடன் இணைந்து, கோவை ‘மலையகம் 200’ மாநாட்டில் விருது வழங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு: மலையக ஆவணக்காப்பாளர் வட்டகொடை சுப்பையா ராஜசேகரன் அவர்களுக்கு, பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்துடன் இணைந்து தெளிவத்தை மண்ணில் வழங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு: ஆவணக்காப்பாளர் டீ.எஸ். டேவிட் அவர்களுக்கு, எல்ல குறிஞ்சிப் பேரவையுடன் இணைந்து எல்ல நியூபர்க் (Newburgh) கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டது.
அந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டிற்கான விருது தோழர் ரஞ்சித் ஜெயகர் அவர்களுக்கு வத்தளையில் வைத்து வழங்கப்படவுள்ளது. முன்னதாக இவ்விழா ஹட்டனில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் வத்தளைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2027 ஆம் ஆண்டிற்கான ‘தெளிவத்தை ஜோசப் ஞாபகார்த்த விருது’ வழங்கும் விழாவை இரத்தினபுரியில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், வத்தளைப் பகுதியில் தமிழ் நூல் வெளியீடுகளையும் இலக்கியச் செயற்பாடுகளையும் ஊக்குவிப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இச்சிறப்புமிக்க நிகழ்வில் கலை, இலக்கியச் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவின் சார்பில், கஹவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஆர். அஜித்குமார் அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.
