*பெருந்தோட்டத் துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்*
இன்றைய தினம் (04) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, பெருந்தோட்டத் துறையில் உள்ள தரிசு நிலங்கள் மற்றும் அவற்றின் எதிர்காலப் பயன்பாடு குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முக்கிய கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் அவர்கள் சுட்டிக்காட்டிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, பெருந்தோட்டத் துறையில் உள்ள தரிசு நிலங்கள் குறித்த தற்போதைய நிலைப்பாட்டை பிரதியமைச்சர் உறுதிப்படுத்தினார்.
மேலும், பெருந்தோட்டத் துறையில் காணப்படுகின்ற தரிசு நிலங்கள் ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டு, அமைச்சரவையின் முறையான அனுமதியைப் பெற்றே சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
குறிப்பாக, எதிர்காலத்தில் மலையகப் பிரதேசங்களில் வாழும் இளைஞர், யுவதிகளின் சுயதொழில் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்தக் காணிகள் அவர்களுக்கு வழங்கப்படுமென பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தினார்.
