நுவரெலியா, வலப்பனை பஸ் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏற முயன்ற பயணி ஒருவர், பஸ்ஸின் முன்சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.
வலப்பனை, ரூபஹா பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த இவர், மீண்டும் கொழும்பு செல்வதற்காக வலப்பனை பஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது, ராகலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த வேளையில், பஸ் முழுமையாக நிற்பதற்கு முன்னரே அதில் ஏற முற்பட்டுள்ளார்.
இதில் தவறி விழுந்த அவரது வலது கால் பஸ்ஸின் முன்சக்கரத்தில் சிக்கியதில் கால் எலும்பு முறிந்துள்ளது.
காயமடைந்தவர் வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
