பசறையில் மரக்கிளை வெட்டும்போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
பசறை – கோணகலை தோட்டத்தின் கஹவத்தை பிரிவில் மரக்கிளை வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (17/11/2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், கோணகலை கஹவத்தை, பசறை பகுதியைச் சேர்ந்த பி. ஜீவகுமார் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த ஜீவகுமாரும், மற்றுமொரு நபரும் கோணகலை தோட்டத்திற்குச் சொந்தமான கஹவத்தை பிரிவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் காணப்பட்ட முள்முருங்கை மரம் ஒன்றின் கிளைகளை வெட்டியுள்ளனர்.
மரத்திலிருந்து கீழே இறங்கிய அவர், கீழே விழுந்த கிளை ஒன்றை வெட்ட முற்பட்ட வேளையில், எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக பசறை கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பசறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
