சட்டோகிராமில் நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியில் பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் சாதனையொன்றை புரிந்துள்ளார்.
இந்த போட்டியில் லிட்டன் தாஸ் 18 பந்து வீச்சுக்களை மாத்திரம் எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக அரைசதம் பெற்றார்.
ஐ.சி.சி. டி:20 போட்டிகளில் பங்களாதேஷ் வீரர் ஒருவர் வேகமாக பெற்ற அரைசதமாக இது பதிவானது.
முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தொடக்க ஐ.சி.சி. ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்காக மொஹமட் அஷரபுல் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந் நிலையில் பங்களாதேஷின் இந்த சாதனை 16 வருடங்களின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
எவ்வாறெனினும் அயர்லாந்துக்கு எதிராக சட்டோகிராமில் தற்சமயம் நடைபெற்று வரும் ஆட்டத்தில் லிட்டன் தாஸ் மொத்தமாக 41 பந்துகளில் 83 ஓட்டங்களை பெற்றார்.
