உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷ்யாவிலும் போராட்டங்கள் நடந்தன.
இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் மகள் மரியா, தனது பாடசாலையில் ஒரு ஓவியத்தை வரைந்தாள். அதில் உக்ரேனிய கொடியுடன் நிற்கும் ஒரு பெண்ணையும், குழந்தையையும் நோக்கி ரஷ்ய கொடி அருகே ஏவுகணைகள் செல்லும் ஓவியத்தை வரைந்தாள்.
இது தொடர்பாக அப்பாடசாலை தலைமை ஆசிரியர், பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் தந்தை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சமூக வலைதளங்களில் ரஷ்யாவின் போர் தாக்குதலை விமர்சிக்கும் கருத்துகளை தெரிவித்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் அவரிடம் இருந்து 13 வயது மகள் பிரிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டாள். அலெக்சி மொஸ்கலியோவை வீட்டு காவலில் வைத்தனர்.
அவர் மீதான வழக்கு, மொஸ்கோவின் தெற்கே யெப்ரேமோவ் நகரில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த அலெக்சிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே வீட்டு காவலில் இருந்த அலெக்சி அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
