அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளை நோக்கி ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பல கட்டங்களாகத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) வௌியிட்டுள்ள முக்கிய தகவல்கள்:
ஜோர்தான் தளம் மீது தாக்குதல்: ஜோர்தானில் உள்ள ‘இளவரசர் ஹசன்’ (Prince Hassan) விமானப் படையணித் தளத்தைக் குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள அமெரிக்க இராணுவத்தின் எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
பஹ்ரைனில் ஒலித்த அபாய எச்சரிக்கை: பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ‘ஷேக் ஈசா’ (Sheikh Isa) பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தளம் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து பஹ்ரைனில் அவசரகால அபாய எச்சரிக்கை ஒலிகள் (Sirens) எழுப்பப்பட்டதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இத்தளம் அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகம் இல்லை என்றபோதிலும், அமெரிக்க இராணுவ விமானங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் முக்கிய வசதிகளை வழங்கி வரும் ஒரு தளமாகும்.
குவைத்திலும் தாக்குதல்: இதேவேளை, குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீதும் தமது படைகள் வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த நேரடி மோதல் போக்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
