மேல் மாகாணம்- கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் கொட்டாஞ்சேனை, அருள்மிகு வரதராஜ விநாயகர் திருக்கோயில்

தடைகள் தகர்த்து வழிகாட்டும் தலைமகனே பிள்ளையாரே
தரணியிலே தமிழ்மொழிக்கு உயர் நிலையைத் தந்துவிடு
திறமையுடன் முன்னேறும் வழியையும் காட்டிவிடு
கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே

அறிவு தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் பிள்ளையாரே
பூவுலகில் மேன்மையுடன் வாழவழி தந்துவிடு
அன்புடனே வாழும் நல்ல வழியையும் காட்டிவிடு
கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே

நேர்வழியில் வழிநடத்தி வழிகாட்டும் பிள்ளையாரே
நேசமுடன் ஒன்றுபட்டு வாழும் வழி தந்துவிடு
ஆக்கமுடன் மேன்மையுறும் வழியையும் காட்டிவிடு
கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே
சஞ்சலங்கள் போக்கி மனவமைதி தரும் பிள்ளையாரே
சத்தியநெறி நின்று வாழும்வழி தந்துவிடு
சிந்தனையில் குழப்பமில்லா வழியையும் காட்டிவிடு
கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே
வழித்துணையாயிருந்தெமக்கு வழிகாட்டும் பிள்ளையாரே
வற்றாத கருணையுடன் ஒன்றுபட்டு வாழும் வழிதந்துவிடு
வழிதவறா நெறிநின்று வாழும் வழி காட்டிவிடு
கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே
வெற்றிக்கு வழிகாட்டி அருள் வழங்கும் பிள்ளையாரே
வெறுப்பில்லா மனம் தந்து இணைந்துவாழும் வழிதந்துவிடு
வேண்டுதல்கள் ஏற்று நாம் நிம்மதியாய் வாழும் வழி தந்துவிடு
கொட்டாஞ்சேனை காட்சிதரும் வரதராஜ விநாயகப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.