வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, ஆறுமுகத்தான் புதுக்குளம் அருள்மிகு முருகன் திருக்கோயில்

அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் முருகனே
அல்லலுற்று அவதியுறும் எமைப் பாராதிருப்பதேன்
கொடுபகையும், வஞ்சனையும் கூடி நின்று வாட்டுது
கொண்ட பொருள் குடியிருப்பு எல்லாம் பறிபோகுது

வருந்தியுழைத்துச் சேர்த்த வளங்களும் பறிபோகுது
ஆதிசிவன் கோயில்களும் திட்டமிட்டு அழியுது
பெற்ற அன்னை சக்தியவள் கருவறையும் கலங்குது
வினை தீர்க்கும் உன்னண்ணன் கோயில்களும் சிதையுது
இந்த நிலை என்றொழிந்து அமைதி வந்து சேருமோ முருகா
ஏனிந்த அவலநிலை என்று நீ சொல்லையா
சொந்த மண்ணில் அந்நியர்போல் அவதியுற்று ஓடிடும்
சுகமில்லா இவ்வாழ்வும் உனது பரிசாகுமோ
வேதனைகள் இனிவேண்டாம் வேல் தாங்கும் முருகனே
வீணர்களின் கொட்டமதை அடக்கியெமைக் காத்திடு
நிம்மதியைக் கெடுத்தெம்மை வதைப்போரை
இனங்கண்டு தண்டனையை வழங்கிடு
சூரனின் கொட்டத்தை அடக்கி அமைதி தந்த முருகா
சூழ்ந்து வரும் பகை கொடுமை அடியோடு அழித்திடு
சுற்றமெல்லாம் நலன் பெறவே அருளினை செய்து
கொடுமதியோர் நிலைகுலையச் செய்துவிடு
வன்னியிலே கோயில் கொண்ட இளமுருகா
வளமாக நாம் வாழ வழி அமைத்து விட்டிடு
தலைநிமிர்ந்து தன்மானம் குன்றாமல் வாழச் செய்துவிடு
தரணியிலே நம்பெருமை நிலைக்கச் செய்துவிடு
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
