வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம் தொண்டமனாறு அருள்மிகு செல்வச்சந்நிதி முருகப்பெருமான் திருக்கோயில்

சூரனை அடக்கி அருள் தந்த முருகா உன்
வீரவேல் துணையெமக்கு என்றுமே ஐயா
கரங்கள் பன்னிரெண்டு கொண்டு அருளுகின்ற முருகா
இரங்கி வந்து எமக்குத்துணை செய்திடுவாய் ஐயா

வட இலங்கைக் கரையினிலே கோயில் கொண்ட முருகா
வளமான எதிர்காலம் தந்திடுவாய் ஐயா
வேடுவன் திருமகளை மணந்தவனே முருகா
நாடெங்கும் நல்லமைதி காத்திடுவாய் ஐயா

செல்வமிகு சந்நிதியில் கோயில் கொண்ட முருகா
நல்லருளை நமக்களிக்க விரைந்திடுவாய் ஐயா
வரும் துன்பம் தடுத்திடவே வந்திடுவாய் முருகா
அல்லல் அகற்றியென்றும் துணைபுரிவாய் ஐயா

நல்மனது கொண்டவரை வாழவைப்பாய் முருகா
நிம்மதியை நிலைத்திடவே செய்திடுவாய் ஐயா
நேர்மையாய் வாழும்வழி வகுத்திடுவாய் முருகா
மனவுறுதி தந்தெம்மை வாழவைப்பாய் ஐயா
அன்னதானக் கந்தனென்று பெயர் கொண்ட முருகா
ஆறுதலை என்றென்றும் தந்திடுவாய் ஐயா
இன்பம் எங்கும் நிறைந்திடவே உறுதி செய்வாய் முருகா
எண்ணமெல்லாம் உன்பெருமை நிறைந்திடட்டும் ஐயா
ஆறுபடைவீடு கொண்ட முத்தமிழே முருகா
ஊருலகம் நன்மைபெற அருளிடுவாய் ஐயா
ஒன்றுபட்டு உய்யும் நிலை ஆக்கிடுவாய் முருகா
உத்தமமாய் நாம் வாழத் துணையிருப்பாய் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
