மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம்- கொட்டாஞ்சேனை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்

நிம்மதியைத் தந்தெம்மை அரவணைக்கும் எம்தாயே
நிரந்தரமாய், நிம்மதியாய் நாம் வாழக் கருணை செய்வாய்
துன்பம் வரும் போது துரத்திவிட வந்திடம்மா
கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

நோய் நொடிகள் நெருங்காது காத்தருளும் எம்தாயே
நொந்துமனம் வாடாமல் நிம்மதியாய் நாம் வாழக் கருணை செய்வாய்
இன்பம் மிகு நல்வாழ்வை என்றும் நிலைநிறுத்திவிட வந்திடம்மா
கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

கொடுபகைமை, வஞ்சனைகள் துரத்திவிடும் தாயே
கௌரவமாய் என்றும் நாம் வாழக்கருணை செய்வாய்
கெடுமதிகள் அண்டாது காத்திடவே வந்திடம்மா
கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
மேற்கிலங்கை வீற்றிருந்து காவல் செய்யும் எம்தாயே
மேன்மை குன்றா நிலையில் என்றும் நாம் வாழக் கருணைசெய்வாய்
மோதவரும் தீவினைகள் சிதைத்தெம்மைக் காவல் செய்ய வந்திடம்மா
கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
அனைத்துயிர்களுக்கும் உயிர் கொடுக்கும் எம் தாயே
உண்மை நெறி தவறாது என்றும் நாம் வாழக் கருணை செய்வாய்
தீயபகை வேதனைகள் அண்டாது காத்திடவே வந்திடம்மா
கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
ஆழிசூழ் உலகினையே தாங்கி நிற்கும் எம் தாயே
ஆபத்துகள் நெருங்காது நாம் வாழக் கருணை செய்வாய்
அச்சம், ஆணவம் எமை அண்டாது காத்திடவே வந்திடம்மா
கொட்டாஞ்சேனை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
