கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம்- திருகோணமலை நகரம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி(சிவன்) திருக்கோயில்

அருவுருவாய் ரூபமாய், அடங்கலுமாகி அதற்கப்புறத்திலுமாகி நின்றாடும் சிவனே
அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் ஐயா போற்றி
வந்தெமக்கு தஞ்சம் தர வேண்டும்
திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே

விசாலாட்சி அம்மையுடன் வீற்றிருக்கும் சிவனே
அகிலமெல்லாம் நிறைந்திருக்கும் ஐயா போற்றி
சஞ்சலங்கள் போக்கியெம்மைக் காத்தருள வேண்டும்
திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே

குளக்கோட்டன் ஆண்டபதி இருந்தருளும் சிவனே
குவலயத்தில் அன்பு மழை பொழிகின்ற ஐயா போற்றி
வஞ்சகர்கள் கொடுமைகளை அறுத்தெறிய வேண்டும்
திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே
உயிர்க்குயிராய் நின்றென்றும் உள்ளாடும் சிவனே
உத்தமராய் வாழும் மனம் அருளுகின்ற ஐயா போற்றி
உறவுகள் இணைந்து நாம் வாழ்ந்திடவே வேண்டும்
திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே
அலை மோதும் பெருங்கடலை அண்மை கொண்ட சிவனே
அசைந்தாடும் இயற்கையையே ஆடவைக்கும் ஐயா போற்றி
திசையெங்கும் வளத்துடனே வாழ்ந்திடவே வேண்டும்
திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே
தமிழர் தலைநகரில் இருந்தருளும் சிவனே
தமிழ் மொழியைத் தரணிக்குத் தந்தவரே ஐயா போற்றி
துணிவு கொண்டு உறுதியுடன் வாழ்ந்திடவே வேண்டும்
திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட விஸ்வநாதப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.