கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம், கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோயில்

காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் பெருமாளே
காலமெல்லாம் உடனிருந்து காவல் செய்து அருளிடைய்யா
கேட்கும் வரம் தந்தெமக்கு ஆறுதலைத் தரவேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே
அலைகடலின் அருகிருந்து அருளளிக்கும் பெருமாளே
கவலைகளை மறந்துவிட உரியவழி தந்திடைய்யா
நிம்மதியைத் தந்தெமக்கு அரவணைப்பைத் தரவேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே
தென்கிழக்கு திசை வீற்றிருக்கும் பெருமாளே
திகட்டாத வாழ்வு தந்து எமை காத்து அருளிடைய்யா
தொல்லையில்லா வாழ்வு தந்து ஆறுதலைத் தரவேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே
பாற்கடலில் பள்ளி கொண்டு பாரினை ஆளுகின்ற பெருமானே
பார்போற்றும் வாழ்வு தந்து எம் பெருமை காத்திடைய்யா
பீதியில்லா வாழ்வுதந்து நிம்மதியைத் தரவேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே
நேர்மை வழி நிற்பவனே நெடுமாலே பெருமாளே
நீதிநெறி காட்டியெம்மை தலைநிமிர உதவிடைய்யா
நொந்து மனம் வாழாத வாழ்வு தந்து மேன்மைதர வேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே
அதர்மத்தை வேரறுத்து அறம் காக்கும் பெருமாளே
அவனியிலே அன்பெங்கும் தலைநிமிர வாழ்த்திடைய்யா
அச்சமில்லா பெருவாழ்வை உறுதி செய்து தரவேண்டும்
பாண்டிருப்பில் கோயில் கொண்ட மகாவிஷ்ணு பெருமாளே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
