வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம்- கிளிநொச்சி, செல்வாநகர் அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
அருள் பொழிந்து வளம் தந்து வாழவைக்கும் தாயே
அனுதினமும் உன் கருணை எமையாள வேண்டும்
இவ்வுலகில் இன்பமுடன் வாழவழி தருவாய்
செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி
வளங்கொண்ட எங்கள் மண்ணில் வீற்றிருக்கும் தாயே
வரும் துன்பங்கள் போக்கியெம்மைக் காத்தரு வேண்டும்
இப்புவியில் நேர்மையுடன் வாழவழி தருவாய்
செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி
நோய் நொடிகள் நெருங்காது காத்தருளும் தாயே
நொந்து மனம் வாடாமல் எமை வாழவைக்க வேண்டும்
நீதிநெறி தவறாது வாழ வழி தருவாய்
செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி
துன்பங்களைத் துரத்தியெம்மை வாழவைக்கும் தாயே
துணிவுடனே நாம் வாழ உன்துணையே வேண்டும்
திறமையுடன் முன்செல்ல உரிய வழி தருவாய்
செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி
பாசமுடன் அணைத்தெம்மை ஆதரிக்கும் தாயே
பரிதவிக்கும் மனம் இன்றி வாழவைக்க வேண்டும்
பெருமையுடன் நாம் வாழவழி தருவாய்
செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி
தொட்டதெல்லாம் துலங்கச் செய்யும் தூயவளே தாயே
துவண்டு மனம் சோராமல் வாழவைக்க வேண்டும்
தீயவழி செல்லாமல் வாழவழி தருவாய்
செல்வா நகர் கோயிலுறை எங்கள் முத்துமாரி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
