வடமாகாணம்- வவுனியா மாவட்டம், வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு வெடுக்கு நாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில்

பழமை மிகு தமிழ் மண்ணில் கோயில் கொண்ட சிவனே
பழம் பெருமை வெளிப்படுத்த திருவுள்ளம் நீ கொண்டாய்
எம்பழமை உன்னுடனே இணைந் துள்ளதைய்யா வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே

மலையுச்சியில் இருந்தருளும் வல்ல எங்கள் சிவனே
மாண்புமிகு உன்னிருப்பை வெளிப்படுத்த திருவுள்ளம் நீ கொண்டாய்
மாதவனே உன் பழமை பார் அறிந்ததைய்யா
வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே

சிவபூமி என்ற பெயர் கொண்ட நம் நாட்டில் காட்சிதரும் சிவனே
சீர்மைமிகு உன் கருணை வெளிப்படுத்த திருவுள்ளம் நீ கொண்டாய்
இலங்கையின் வரலாறு உன்னுடனே இணைந் துள்ளதைய்யா
வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே
காலத்தால் உலகறிந்த காவலனே சிவனே
கனிந்து வந்த காலத்தாலுன்னை வெளிப்படுத்த திருவுள்ளம் நீ கொண்டாய்
காலமெல்லாம் உன்பெருமை நிலைத்து நிற்குமைய்யா
வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே
தக்கனின் கொட்டத்தை அடக்கி அடிபணித்த சிவனே
தறிகெட்ட செயல் அடக்க திருவுள்ளம் நீ கொண்டாய்
தீயவர்கள் செயலிழக்க விரைந்திடுவாயைய்யா
வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே
சிவன் கோயில் சிதைத்தவர்கள் சீரழிந்தார் சிவனே
வரலாற்றில் இதையறிய திருவுளம் நீ கொண்டாய்
வீணர்களின் கொட்டமதை அடக்கிவிட விரைந்து வெளிப்படுவாயைய்யா
வெடுக்குநாறி மலையினிலே இருக்கின்ற ஆதிலிங்கேஸ்வரப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
