மேல்மாகாணம் – களுத்துறை மாவட்டம்- பாணதுறை நகரம் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

பாணதுறை நகரினிலே கோயில் கொண்ட மால்மருகா
பாரினிலே அருளாட்சி நிலைக்க ஏற்றுவழி ஆற்றிடுவாய்
பீதியின்றி, பிணியின்றி வாழ்வதற்கு கருணையும் செய்வாய்
பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே

தீயபகை, கொடுமைகளைத் துடைத் தெறிய வருபவனே
தீயவர்கள் தீச் செயல்கள் அழித்து எமைக் காத்திடுவாய்
தொல்லையின்றி, தோல்வியின்றி வாழ்வதற்கு கருணையும் செய்வாய்
பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே

மேற்கிலங்கைக் கரையினிலே வீற்றிருக்கும் சிவன் மகனே
மேதினியில் மாண்புடனே வாழும் வழி தந்திடுவாய்
மேன்மையுடன் வாழ்வதற்கு கருணையும் செய்வாய்
பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே

வள்ளி தெய்வானையருடன் காட்சிதரும் உமைமகனே
வளமான எதிர்காலம் நிலைக்க வழி ஆற்றிடுவாய்
வெற்றியுடன் வாழ்வதற்கு கருணையும் செய்வாய்
பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே
சூரனை அடக்கி அறங்காத்த தீரமிகு வேலவனே
தீராத துன்பங்களைப் போக்கி வாழவழி திறந்திடுவாய்
துரத்தி வரும் துன்பங்களைத் தடுத்து வாழக் கருணையும் செய்வாய்
பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே
செந்தமிழின் காவலனாய்த் திகழ்கின்றன பேரருளே
சுதந்திரமாய் நாமென்றும் வாழவழி செய்திடுவாய்
சோர்வில்லா வாழ்வு தந்து வாழ நீ கருணை செய்வாய்
பாணதுறை இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
