இந்தவருடம் ஜனவரியில் அறிவிக்கப்பட்ட டிஜிடல் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) டிஜிடல் வசதிகள் மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைகளைப் பயன்படுத்தி இலங்கையர்கள் தமது கடன் நிலை தொடர்பாக தெரிந்துகொள்ளவும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன் நிலைகளை நிருவகிப்பதற்கும் ஊக்குவிக்கின்றது.
இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகம் கடன் வழங்குபவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையேயான தகவல் இடைவெளியைக் குறைப்பதில் பங்களிப்பதுடன், அதி நவீன கடன் தகவல் மேலாண்மை அமைப்பையும் பயன்படுத்துகின்றது.
இவ்வமைப்பு சகல நிதி நிறுவனங்களுடனம் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்கின்றது. அவை தவணைக் கடன்கள், கடனட்டைகள், குத்தகை, தங்கக் கடன்கள், அடகு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சகல கடன் தகவல்களையும் சட்டரீதியாக வழங்குகின்றது.
இக்கடன் தகவல் சேகரிப்பு, உலகளாவிய நடைமுறைகளுடன் சீரமைக்கப்பட்டது. தற்போது பாரம்பரியமற்ற தரவைச் சேர்ப்பதற்கும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது கடன் தரவுகள் இல்லாத விளிம்புநிலை குடிமக்களுக்கும் கடன் அணுகலை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
பயன்பாட்டுக் கொடுப்பனவுகள், தொலைத் தொடர்புகள் மற்றும் காப்புறுதி போன்றவற்றின் பதிவுகளை வைத்திருப்பதுடன், இலங்கை சனத்தொகையில் சுமார் அரைவாசிக்கு சிறந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் முறையான நிதித் துறையிலிருந்து கடனைப் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபர்கள் தற்போது தமது இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகத்தின் கடன் அறிக்கை மற்றும் கடன் மதிப்பெண்ணை (CRIB MyReport) எனப்படும் சுயவிசாரணைக் கடன் அறிக்கைத் தெரிவிலிருந்து அணுகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
