சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவொரு கலந்துரையாடலுக்கும் எந்த நேரத்திலும் தாங்கள் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் மற்றும் நிபந்தனைகள் எனக் கூறி நாட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையான யோசனையல்ல.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கை மற்றும் அது தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பில் மெய் நிகர் மூலம் கலந்துரையாடுவதற்குத் தாம் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கருத்து தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனை பெற்று அதன் ஆதரவைப் பெற வேண்டும் என, நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக அறிவிப்பதற்கு முன்னரே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொருளாதாரக் கொள்கைக் குழுவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிபந்தனைகள் எதுவும் இருப்பின் அவை திருத்தப்பட வேண்டும் என்ற யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்திருந்ததாக அதன் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
