ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாகுடுகலை, மகாவலி குவார்டர்ஸ் பகுதியில் இடம்பெற்ற மர்மமான வெடிப்புச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில், 46 வயதுடைய சித்ராதேவி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விவசாய காணி ஒன்றுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென இடம்பெற்ற மர்ம வெடிப்புச் சத்தத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் படுகாயமடைந்த சித்ராதேவி, உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெடிப்புச் சம்பவம் எதனால் ஏற்பட்டது? எத்தகைய வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் வலுத்துள்ளன.
நீதி மற்றும் நட்டஈடு: பாதிக்கப்பட்ட சித்ராதேவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அத்துடன், காயமடைந்த அவருக்குப் போதிய நட்டஈடும், மருத்துவ உதவிகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் தெரிவிகின்றனர்.
