வி.தீபன்ராஜ்
லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு.
கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவனை இன்றைய தினம் (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரே மாணவன் மட்டும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தீவிரமாகத் தேடியும் மாணவனின் உடலை நேற்று (13) கண்டறிய முடியவில்லை போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (14) நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் , பொலிசார் மற்றும் பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது காணாமல் போயிருந்த மாணவன் சடலமா மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லிந்துலை திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னர் மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
