போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையமொன்றை (Correctional Centre) நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1999 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கீழ் சுற்றுலா நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்கள் மூலம் சிறு தவறாளர்களுக்கு சமுதாயஞ்சார் சீர்திருத்தக் கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் அதிகமானவர்கள் போதைப்பொருள் அல்லது மதுசாரம் தொடர்பான தவறாளர்களாக இருப்பதுடன், அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து ஆரோக்கியமான பிரஜைகளாக சமூகமயப்படுத்துவதற்கு விசேட கவனத்தைச் செலுத்தி சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கட்டியெழுப்புவதற்கு சமுதாயஞ்சார் சீர்திருத்தச் செயன்முறைக்கு உட்படுத்தப்படுவர்.
ஆயினும், சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்திடம் அதிகமான போதைப்பொருட்களுக்கு அடிமைப்பட்டு தவறாளர்களாக இருக்கின்ற ஆட்களுக்கு வதிவிட சிகிச்சையை வழங்குவதற்குத் தேவையான பொருத்தமான போதியளவு விடுதி வசதிகள் இல்லை.
அத்துடன், இத்திணைக்களத்திற்குச் சொந்தமான எவ்வித வதிவிட/வதிவிடமற்ற சீர்திருத்த நிலையங்களும் இல்லை. அதனால், இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு, கெக்கிராவ பிரதேசத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள 1.33 ஹெக்டெயார் நிலப்பரப்பில் நீதிமன்ற கட்டளைகள் மூலம் வழங்கப்படும் போதைப்பொருள் தொடர்பான தவறாளர்களுக்கு சீர்திருத்த நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு 635 மில்லியன் மதிப்பீட்டுச் செலவின் கீழ் கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

