பதுளை மாவட்டம், பசறை பிரதேசத்திற்கு உட்பட்ட வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தைத் தனியாருக்கு வழங்கும் எண்ணத்தை தோட்ட நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தொழிலாளர் தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பிரதான இணை அமைப்பாளரும், பசறை பிரதேச சபை உறுப்பினருமான தங்கையா பிரதீபன் பிரபு வலியிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
”மக்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது தோட்ட நிர்வாகத்தின் கடமையாகும். அதை விடுத்து, தோட்டத்தைத் தனியாருக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன், பதுளை மாவட்டத்தில் உள்ள பல தோட்டங்களிலும் முகாமையாளர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்து, மக்களைப் பெரும் சுமைக்கு ஆளாக்கியுள்ளன. பேருக்கு 24 கிலோ கொழுந்து அல்லது பால் கேட்கும் இவர்கள், தொழிற்சாலைகளையும் மூடிக்கொண்டு வருகின்றனர். இந்த நிலைமைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தொழிற்சங்க சந்தா சேர்ப்பதில் மாத்திரம் அக்கறை செலுத்தும் ஆளுத்தரப்புத் தொழிற்சங்கங்கள், இன்று மக்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக மௌனம் காத்து வருகின்றன. தோட்ட நிர்வாகங்களின் ஆதிக்கமே எங்கும் கைோங்கி நிற்கிறது; அதிகாரம் மிக்க பதுளை மாவட்டத்தின் பாராளுமன்ற, மாகாண அரசியல் பிரதிநிதிகளும் மௌனம் காக்கின்றனர்.
அவர்கள் தோட்ட நிர்வாகிகளுக்கு ஊதுகின்ற மகுடிகளுக்கு அடங்கிப் போனாலும், தொழிலாளர் தேசிய சங்கம் ஒருபோதும் அதற்கு அடிபணியாது. எங்களுடைய தலைவர் வீ. ராதாகிருஷ்ணன் எப்போதும் மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களுடன் ஒன்றிணைந்து நிற்பவர். பதுளையில் எமது மக்களுக்கு எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும், அதனை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
