பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி அலுவலக ரயில் ( கங்கொட மற்றும் கடிகமுவ ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (05) அதிகாலை 4.40 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் கற்கள் சரிந்து விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தற்போது கடுமையாகத் தாமதமடைந்துள்ளன.
’டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப் பெற்ற முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்தினால் ரயிலின் முன்பகுதிக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ரயிலின் சாரதியான டீ.ஏ.பி. செந்தநாயக கருத்துத் தெரிவிக்கையில், “ரயில் பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்தது. நாங்கள் அதனை அவதானித்தபோது 10 மீற்றர் தூரம்கூட இருக்கவில்லை. அதிவேகத்தில் மண் திட்டில் மோதியவுடன் ரயில் தூக்கி வீசப்பட்டது. அவ்வாறு மோதிய வேகத்திலேயே அங்கிருந்த பாறையொன்றிலும் மோதியதால் முன் பகுதி பலத்த சேதமடைந்தது” எனக் குறிப்பிட்டார்.
