மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவுறுத்தல்
வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இன்று (27) முற்பகல் 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் நகர்வு மற்றும் தற்போதைய நிலை:
மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய ‘அர்னாப்’ தீவிரப் புயலானது மேலும் வலுவடைந்து ‘மிகத் தீவிரப் புயலாக’ மாற்றமடைந்துள்ளது. இது இன்று (27) அதிகாலை 02:30 மணியளவில் வட அகலாங்கு 15.9 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4 – அதாவது காங்கேசன்துறையில் இருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்கு திசையில் மையம் கொண்டிருந்தது.
இப்புயல் இன்று மாலை 05:30 மணி வரை மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதுடன், அதன்பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை (28) முற்பகல் 11:30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையினூடாக இந்தியக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் நிலைமை மற்றும் காற்றின் வேகம்:
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, பலத்த இடிமின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். அத்துடன், கடல் அலைகளின் உயரமானது சுமார் 3.0 முதல் 4.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதுடன், இக்கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவசர எச்சரிக்கை அறிவுறுத்தல்:
இதன்காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள கடற்பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
