நுவரெலியா மாவட்டத்தில் குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பேருந்துகளுக்கு எதிராக தீபாவளி பண்டிகைக் காலம் முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
இ.போ.ச. டிப்போக்களின் பொறியியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில், 3 ஆம் திகதி பிற்பகல் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம் முழுவதும் சேவையில் ஈடுபடும் இ.போ.ச. மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கடந்த ஒரு வருட காலமாகப் பரிசோதிக்கப்பட்டு, அவற்றில் காணப்பட்ட குறைபாடுகளைச் சீர்செய்வதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், இனிவரும் காலங்களில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் இ.போ.ச. பேருந்துகள் குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சாரதி, நடத்துநர், டிப்போ முகாமையாளர் மற்றும் டிப்போ பொறியியலாளர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்திற்காக நாளாந்தம் டிப்போக்களிலிருந்து சேவைக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு பேருந்தும் தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், எவ்வித தொழில்நுட்பக் கோளாறுகளோ குறைபாடுகளோ இன்றி சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு பேருந்தும் அதன் ஆரம்ப வடிவமைப்புக்கு அமைவாக இருக்க வேண்டும். பேருந்தின் வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிச் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதிகளை டிப்போ பொறியியலாளர் சாரதிக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், டிப்போவினால் வழங்கப்படும் வருமான அனுமதிப்பத்திரத்தின் பிரதியை, சேவையில் ஈடுபடும் ஒவ்வொரு பேருந்தினதும் முன்பக்கக் கண்ணாடியின் இடதுபுறத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தரங்கு நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ரோஷன் குரேவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செ. திவாகரன்
