சவுதி மரண தண்டனையிலிருந்து முழுமையாக விடுக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார்: வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தகவல்!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனுக்கு எதிராக சவுதி நீதிமன்றத்தில் இனி எந்த வழக்குகளும் இல்லை என்றும், அவர் ஓரிரு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசா, சமூக வலைத்தளப் பதிவு ஒன்றின் மூலம் அவதூறு பரப்பியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2026 செப்டம்பர் 17 ஆம் திகதி கிழக்கு பிராந்திய சவுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
இத்தண்டனையை ரத்து செய்து அனோஜனை மீட்க இலங்கை அரசாங்கம் தீவிர தூதரக மற்றும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தொடர் இராஜதந்திர தலையீடுகளின் பலனாக கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி நீதிமன்றம் ரத்து செய்தது.
இருப்பினும், ஏனைய தண்டனைகளிலிருந்தும் அவரை முழுமையாக விடுவிப்பதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக, அவருக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வதில்லை என சவுதி அரேபியாவின் பொதுத்துறை வழக்குத்தொடுநர் கடந்த 2026 நவம்பர் 09 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள அனோஜன், தற்போது சவுதி அரேபியாவில் தற்காலிகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை விரைவாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தூதரக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, அனோஜன் சிவராசாவின் குடும்ப உறவினர்கள் இன்று (11) கொழும்பில் உள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சர்களைச் சந்தித்தனர். தமது மகனை மீட்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஜனாதிபதியின் சரியான வழிகாட்டல் மற்றும் தூதரக ரீதியிலான தீவிர தலையீடுகளே இந்த வெற்றிக்குக் காரணம் எனத் தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், இதற்காக ஒத்துழைப்பு நல்கிய சவுதி அரசாங்கம், அந்நாட்டு நீதிமன்றம், இருநாட்டு இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் சவுதி அரேபியா சென்று வாதாடிய இலங்கைச் சட்டத்தரணிகள் குழுவிற்கும் தனது கௌரவத்தை உரித்தாக்கினார்.
