மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அத்திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில், இன்று (18) நள்ளிரவு முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக நிகழ்நிலையில் (Online) வாகன வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் சேவையும் குறித்த காலப்பகுதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும்.
இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெற வேண்டிய அனைத்து வாகனங்களுக்கும், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படாமல் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாண மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் இலத்திரனியல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பப் புதுப்பித்தல் பணிகள் காரணமாகவே இந்தச் சேவைத் தடை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
