கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை ஐந்து மணி முதல், நாளை அதிகாலை ஐந்து மணி வரையான இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர மற்றும் கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல ஆகிய பகுதிகளுக்கு, இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டி மாவட்டத்தின் ஹதரலியத்த, தும்பனே, பஸ்பாகே கோரளை, கங்கவட்ட கோரளை ஆகிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் கடவத்த சத்தர, கலிகமுவ, ரம்புக்கண, அரநாயக்க ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு, நிலம் தாழிறங்குதல் மற்றும் நிலப்பரப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
