செ. திவாகரன்.
நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு
நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் ஆபத்தான வளைவுகள் மற்றும் அதிக சரிவுகளைக் கொண்ட பகுதிகளில் பாதுகாப்பு இரும்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தின் ஊடாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச தரம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அமைவாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கல முதல் தலவாக்கலை வரையிலும், தலவாக்கலை – பூண்டுலோயா வீதியிலும், கினிகத்தேனை – தியகல ஊடாக சிவனொளிபாத மலை வீதியிலும் 10.5 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்தப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த வீதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அதிகளவான வாகன விபத்துக்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2026–2027 சிவனொளிபாத மலை யாத்திரை பருவம் ஆரம்பமாவதற்கு முன்னர் இப்பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும்போது சாரதிகளுக்கு பாதுகாப்பு வேலிகள் தெளிவாகத் தெரிவதற்காக, ஒளியை பிரதிபலிக்கும் வகையிலான சமிக்ஞை வசதிகளும் அவற்றில் ஏற்படுத்தப்படவுள்ளன.
