இந்தியாவின் மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான – Lyca Productions – தற்போது இலங்கையில்
புதிய தயாரிப்பு நிறுவனத்தினூடாக இலங்கையின் திரைப்பட தயாரிப்பு துறைக்கு ஊக்குவிப்பு வழங்கப்படும்
செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2023, கொழும்பு;
இந்தியாவின் மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Lyca Productions, இலங்கையில் நவீன வசதிகள் படைத்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் சிறந்த திரைப்பட தயாரிப்பு வசதிகளைக் கொண்டுள்ள நிறுவனம், இலங்கையர்களுக்கு திரைப்பட தயாரிப்பு தொடர்பான நவீன தொழில்நுட்ப அறிவை வழங்கி, உள்நாட்டு திரைப்படத் துறையை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்தாபிப்பு தொடர்பான அறிவிக்கும் கோலாகல நிகழ்வில், உள்நாட்டு நட்சத்திரங்களுடன், தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பலரும் பங்கேற்றிருந்தனர்.
EAP Films and Theatres (Pvt) Ltd. உடன் இந்தியாவின் Lyca Productions ஏற்படுத்திக் கொண்ட மூலோபாய பங்காண்மை தொடர்பில் Lyca குழுமத்தின் தவிசாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா கருத்துத் தெரிவிக்கையில், “திரைப்படத்துறையில் EAP குழுமம் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், அக்குழுமத்துடன் இணைந்து, இலங்கையில் நவீன வசதிகள் படைத்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமொன்றை நிறுவுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். Lyca Productions ஸ்ரீ லங்கா ஊடாக, மாபெரும் கலை வளங்களில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்து, இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை உலகளாவிய ரீதியில் சகல பிரிவுகளிலும் சிறந்த வரவேற்பைப் பெறச் செய்வது இலக்காக அமைந்துள்ளது. காலப்போக்கில், இலங்கையர்கள் பலருக்கு நவீன திரைப்பட தயாரிப்பு நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்தில் விஸ்தரிப்புகளை மேற்கொள்வதற்காக எமது முதலீடுகளை மேம்படுத்துவோம்.” என்றார்.
EAP Films and Theatres என்பது இலங்கையின் மாபெரும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையிடுவோராகவும் திகழ்கின்றது. இலங்கை, இந்திய மற்றும் ஹொலிவுட் திரைப்படங்களின் மாபெரும் விநியோகத்தர்களாகவும் திகழ்கின்றது. இந்நிறுவனத்தினால் 14 நவீன சினிமாத் திரையரங்குகள் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் Savoy, Cinemax, Wilmax மற்றும் Concord ஆகிய திரையரங்குகள் அடங்கியுள்ளன. இவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், மொபைல் மற்றும் ஒன்லைன் முற்பதிவுகள் போன்றனவும் அடங்கியுள்ளன. தனது வலையமைப்பில் 45 திரையரங்குகளை கொண்டுள்ளது.
இலங்கையின் விருது வென்ற நடிகரான ரஞ்சன் ராமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “சிங்கள திரைப்படத்துறைக்கு இது மிகவும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் சிங்கள திரைப்படங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருந்தன. இலங்கையில் Lyca Productions வசதிகள் நிறுவப்பட்டுள்ளதனூடாக, உள்நாட்டு திரைப்படத் துறைக்கு பெரும் ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பல புதிய இலங்கைத் திரைப்படங்களை நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
தேசிய திரைப்பட கூட்டுத் தாபனத்தின் தவிசாளர் தீபால் சந்திரரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “எமது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார வாழ்க்கையின் ஒரு உள்ளக அங்கமாக தேசிய திரைப்படத் துறையையும், இலங்கை சினிமாத்துறையையும் பேணி, பாதுகாத்து, கட்டியெழுப்பி, ஊக்குவிப்பதற்கு நாம் சகல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொள்கின்றோம். தொழிற்துறை அதிகளவு வினைத்திறனானதாக இருக்கலாம் என்பதுடன், அரசாங்கத்தினால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உதவிகளை வழங்கி, துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கையில் Lyca Productions அறிமுகம் செய்யப்பட்டுள்ளதனூடாக, திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிகளவு ஈடுபாட்டை தோற்றுவித்து, சிறந்த தரமான திரைப்படங்களை தயாரிக்கக்கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் சினிமாத்துறையின் புதிய அங்கத்தவராக அவர்களை நாம் வரவேற்கின்றோம்.” என்றார்.
Lyca Productions ஸ்ரீ லங்கா அறிமுக நிகழ்வில், இலங்கையின் திரைப்படத்துறையின் பிரபலங்கள், இந்திய நட்சத்திரங்கள், வியாபாரத் தலைவர்கள் மற்றும் விளம்பர முகவர் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
LYCA Productions ஸ்ரீ லங்கா பற்றி:
உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலகளாவிய ரீதியில் வழங்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல்தேசிய நிறுவனமான Lyca குழுமத்தின், Lyca Productions இந்தியாவின் விரிவாக்கமாக Lyca Productions ஸ்ரீ லங்கா அமைந்துள்ளது. Lyca Productions என்பது இந்தியாவின் களிப்பூட்டும் அம்சங்களை வழங்கும் நிறுவனம் என்பதுடன், 2014 ஆம் ஆண்டில் அல்லிராஜா சுபாஸ்கரனினால் நிறுவப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் நடவடிக்கைகளில் இந்த தயாரிப்பு ஸ்ரூடியோ ஈடுபட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் திரையம்சங்களை தயாரித்து, ஊக்குவித்து வெளியிடுவது Lyca இன் நோக்கமாக அமைந்துள்ளது.
Lyca Productions இனால் இந்தியாவில் பல புகழ்பெற்ற திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, கத்தி, 2.0, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, எமன், இப்படை வெல்லும், தியா, கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், வட சென்னை, விசாரணை, தர்பார், மாபியா, டொன், பன்னிகுட்டி, நாய்சேகர் ரிடர்ன்ஸ், ராங்கி, திருவின் குரல் மற்றும் தீரா காதல், ராம்சேது மற்றும் குட் லக் ஜேர்னி ஆகியன அடங்குகின்றன. விரைவில் வெளியிடப்படவுள்ள திரைப்படங்களில், சந்திரமுகி-2, லால் சலாம், AK62, தலைவர் 170 மற்றும் இந்தியன் -2 போன்றன அடங்கியுள்ளன. முன்னணி நட்சத்திரங்களின் மலையாளம், கன்னடா மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களை அடுத்த ஆண்டிலிருந்து அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில் Lyca மொபைல் அறிமுகம் செய்யப்பட்டது முதல், குழுமத்தின் சேவைப் பிரிவில் பல தயாரிப்புகள் மற்றும் சேவைகளும் உள்வாங்கப்பட்டன. இதில் தொலைத்தொடர்பாடல், களியாட்டம், பிரயாணம் மற்றும் சுற்றுலா, சுகாதார பராமரிப்பு, ஊடகம், தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் விருந்தோம்பல் போன்றன அடங்குகின்றன.
மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு https://lycaproductions.in/ https://www.lycamobile.co.uk/ அல்லது https://www.lycagroup.com/
