நடிகர் விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீரா. இவர் சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு தனது தந்தை அறையில் மீரா உறங்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் அவர் தனது துப்பட்டாவால் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து வீட்டுப் பணியாளர் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மீராவின் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விஜய் ஆண்டனி கடந்த 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள்தான் மீரா. இவர் விளையாட்டில் வெற்றி பெற்றதற்கு பாத்திமா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருக்கையில் எனது கண்ணீருக்கு ஆறுதல், சுட்டித்தனத்தால் எனது கோபத்திற்கு அவர்தான் காரணம், என் தங்ககட்டி, செல்லகுட்டி , வாழ்த்துகள் மகளே என தெரிவித்திருந்தார்.
இத்தனை பாசத்தை கொட்டி வளர்த்த மீரா இன்று உயிருடன் இல்லை. இவருடைய இறப்புக்கு மன அழுத்தம் காரணமாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.