ஆப்கானிஸ்தானின் தலீபான் ஆட்சியாளர்கள், சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று பதிவான பூமியதிர்ச்சியினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். ஆப்கானிஸ்தான் 20 வருடங்களின் பின் முகங்கொடுத்த மோசமான அனர்த்தமாக இது பதிவாகியுள்ளது. பூமியதிர்ச்சியினால் சில கிராமங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் இருப்பிடங்களை இழந்துள்ளனர். அவர்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையும் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச நாடுகள் முன்வரவேண்டுமென தலீபான் ஆட்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை தலீபான் அமைப்பினரின் ஆட்சியை சர்வதேச நாடுகள் பல நிராகரித்துள்ளன. இவ்வாறான சூழலில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்குமா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. எனினும் சில நாடுகள் மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.